தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
இரண்டாவது போட்டியில் அணித் தலைவி மனுதி; நாணயக்கார குவித்த அரைச் சதம், சமோதி ப்ரபோதா முனசிங்க, அசேனி தலகுனே, லிமன்சா திலக்கரட்ன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கை இளையோர் (மகளிர்) அணியை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தது.
தஹாமி செனெத்மா, மனுதி நாணயக்கார ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
தஹாமி செனெத்மா 25 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மனுதி நாணயக்காரவும் ரஷ்மிக்கா செவ்வந்தியும் 3ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மனுதி நாணயக்கார 50 ஓட்டங்களைப் பெற்றார்.
ரஷ்மிக்கா செவ்வந்தி 27 ஓட்டங்களுடனும் சுமுது நிஸன்சலா 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் நிஷித்தா அக்தர் நிஷி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 12.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
சாதியா அக்தர் (18), பர்ஜானா ஈஸ்மின் 10 ஆ.இ. ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சமோதி ப்ரபோதா முனசிங்க 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசேனி தலகுனே 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.