முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அந்த வீதியூடாக இன்று பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களும், பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன், மார்ச் மாதமளவில் புனரமைப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்றும், அதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் எனவும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.