கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் 6ஆவது தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ் முதலாவது அணியாக முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 205 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மீள் வருகை தந்த பக்கார் ஸமானின் அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 32.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன் ஆப்கானிஸ்தானும் இலங்கையும் 6ஆம், 7ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டன.
அப்துல்லா ஷபிக், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் 127 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அப்துல்லா ஷபிக் 69 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
அடுத்து களம் புகுந்த அணித் தலைவர் பாபர் அஸாம் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (160 – 2 விக்.)
மொத்த எண்ணிக்கை 169 ஓட்டங்களாக இருந்தபோது பக்கார் ஸமான் சிக்ஸ் ஒன்றை அடிக்க முயற்சித்து பவுண்டறி எல்லையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியதால் அடுத்த 3 போட்டிகளில் விளையாடாமல் ஓரங்கட்டப்பட்டிருந்த பக்கார் ஸமான் 74 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸ்கள், 3 பவுண்டறிககளுடன் 81 ஓட்டங்களைப் பெற்றார்.
பக்கார் ஸமான் ஆட்டம் இழந்த பின்னர் மொஹமத் ரிஸ்வான், இப்திகார் அஹ்மத் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ரிஸ்வான் 26 ஓட்டங்களுடனும் இப்திகார் அஹ்மத் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததுடன் 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
இந் நிலையில் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும் மஹ்முதுல்லா 56 ஓட்டங்களையும் பெற்று 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (130 – 5 விக்.)
மத்திய வரிசையில் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன், மெஹ்மதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஷக்கிப் அல் ஹசன் 43 ஓட்டங்களைப் பெற்றதுடன மெஹ்தி ஹசன் மிராஸ் 25 ஒட்டங்களையும் பெற்றனர்.
ஷஹீன் ஷா அப்ரிடி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் வசிம் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: பக்கார் ஸமான்.