சீரற்ற வானிலை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான இலங்கை – இந்திய கப்பல் சேவை கடந்த வியாழக்கிழமையிலிருந்து (நவம்பர் 7) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்தப்பட்டது .
கப்பல் சேவையின் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன், மழையுடனான வானிலையின் தாக்கம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய தினங்களில் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். நாளை (நவம்பர் 12) வானிலை சரியாக இருந்தால் சேவை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது; இருப்பினும், தற்போதைக்கு நவம்பர் 16க்கு மேல் முன்பதிவு செய்யவில்லை.
கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசையைப் பொறுத்து கப்பல் பயணத்தின் பாதுகாப்பு தீர்மானிக்கப்படுகிறது, இதற்காக வானிலை முன்னறிவிப்பு மற்றும் Windy app போன்ற செயலிகளின் உதவியை நிறுவனம் பெறுகிறது. இதேபோல், வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக வர்த்தகப்பகுதி கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.