
நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்ஸ் ‘எனும் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் நட்சத்திர அந்தஸ்திற்காக மீண்டும் கடுமையாக உழைத்து வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’ பட புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான ராகுல் தயாரித்திருக்கிறார்.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் இப்படத்தை பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.