வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பெய்ஞ்சல் ( peinjal ) என அழைக்கப்படும் யானது திருகோணமலையிலிருந்து வடக்காக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்வதுடன் இன்று நண்பகல் வேளையில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களுக்கு இடையாக ஊடறுத்து செல்லக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பீன்ஜல் சூறாவளியால் நாட்டின் சீரற்ற வானிலை தாக்கமானது படிப்படியாக குறைவடைய கூடும்.
மேலும், வட மாகாணத்திலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் வானம் பனிமூட்டமாகவும் காணப்படும்.
வட மாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கூறியுள்ளார்.