அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இடது முழங்கையில் காயமடைந்ததால் விளையாடாமல் இருந்த தென் ஆபிரிக்கா அணித் தலைவர் டெம்பா பவுமா பூரண குணமடைந்ததை அடுத்து தென் ஆபிரிக்கா அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு 14 வீரர்களைக் கொண்ட அணியினை தென் ஆபிரிக்கா நேற்றுமுன்தினம் அறிவித்தது.
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியவர்களில் மேலும் இருவர் நீக்கப்பட்டு மார்க்கோ ஜென்சென், ஜெரால்ட் கோயெட்ஸி ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக இந்த வருடம் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கு பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் முதல் தடவையாக டெஸ்ட் அணியில் கலந்துகொள்கின்றனர்.
‘டெம்பா குணமடைந்த பிறகு அணியை மீண்டும் வழிநடத்த இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவரது தலைமைத்துவமும் திறமையும் அணிக்கு விலைமதிப்பற்றவை’ என தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுனர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.
மேலும் டெம்பா ஓய்வில் இருந்தபோது பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைமையைப் பொறுப்பேற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஏய்டனுக்கு நன்றிகூற விரும்புகிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்களான ஜென்சன், கோயெட்ஸீ ஆகியோரது வருகையினால் அணிக்கு வலு சேர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இந்தியா 58.33 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 55.56 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நியூஸிலாந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 54.17 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.
தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிஸபெத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.