இலங்கையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் அறிவித்துள்ளார்.
சில இடங்களில் 50 மில்லிமீட்டருடன் பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்படக் கூடும்.
பொது மக்களுக்கு வானிலை மாற்றங்களை அவதானிக்குமாறும், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் உள்ள இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கடி வீசக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும், ஆனால் இடியுடன் கூடிய மழையின் போது கடல் பிராந்தியங்களில் தற்காலிகமாக கொந்தளிப்பு அதிகரிக்கும்.