தமிழ்நாடு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் இந்த நடைபயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து முடிந்தது.
யாத்திரை செல்லும் ஊர்களில் மக்களின் குறைகளை கேட்கும் அண்ணாமலை, அங்கு தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு செயல்களை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாத யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார்.
பொதுவாக தமிழ்நாட்டில் மணப்பாறை நகரம் முறுக்குக்கு மிகவும் பிரபலம் ஆனது. மணப்பாறை முறுக்கு தமிழகத்தின் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணப்பாறை முறுக்கின் ருசிதான் தனித்துவம் ஆகும். இந்நிலையில் மணப்பாறையில் வீதி வீதியாக சென்ற அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது காமராஜர் சிலை அருகே தெருவோர முறுக்கு கடைக்கு சென்ற அண்ணாமலை, அங்கு முறுக்கு போட்டுக்கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து தொண்டர்கள் முறுக்கு போடுமாறு அண்ணாமலையிடம் வேண்டுகோள் வைத்தனர். தொண்டர்களின் வேண்டுகோள் ஏற்று முறுக்கு பிழியும் உலக்கை வாங்கி, கரண்டியின் மீது வைத்து முறுக்கு பிழிந்தார்.
பின்னர் அழகாக அப்படியே எடுத்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் முறுக்கினை பக்குவமாக உள்ளே இறக்கினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என்று குரல் எழுப்பினார்கள். தொடர்ந்து முறுக்கு அழகாக பிரிந்து மேலே வந்தது.
இதனிடையே அங்கிருந்த பாஜக தொண்டர்களுக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் முறுக்கு கடைக்கார் முறுக்கு கொடுத்தார். அதை அவர்கள் ரசித்து சாப்பிட்டனர். தொடர்ந்து முறுக்கு கடைகக்கார், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்குமாறு முறுக்குகளை பார்சல் கட்டி அண்ணாமலையிடம் கொடுத்தார். அப்போது பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் பாரத் மாதகி ஜே என்று குரல் எழுப்பியபடி இருந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்ணாமலை டீக்கடை, பரோட்டா கடை, ஓட்டல் என பல்வேறு இடங்களில் இதே பாணியில் பிரச்சாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.