தமிழ்நாடு
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தனது சொந்த மாவட்டமான கரூரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது, கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கிலிருந்து கவிதா ஒரு போதும் தப்ப முடியாது எனவும் அண்ணாமலை காட்டமாக எச்சரித்துள்ளார்.
ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளியே கரூர் மேயர் கவிதா தான் என்றும் தாங்கள் பெட்டிஷன் போடவுள்ளதாகவும் மேயர் கவிதா எங்கே தப்பித்துச் செல்கிறார் என பார்த்துவிடுகிறோம் எனவும் அனல் கக்கினார் அண்ணாமலை.
செந்தில்பாலாஜியே இன்னும் உள்ளே தான் இருக்கிறார் என்றும் அவரை விட கரூர் மேயர் கவிதா என்ன பெரிய ஆளா என வினவிய அண்ணாமலை, இன்னும் ஒரு மாதம், இரண்டு மாதம் வேண்டுமானால் ஆகலாம் ஆனால் மூன்று மாதத்தில் உள்ளே செல்வது உறுதி என அடித்துக் கூறினார்.
மத்திய அரசு அதிகாரிகள் மீது கை வைத்திருக்கிறீர்கள் அது சிபிஐ விசாரணைக்கு போகாதா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கரூர் மேயர் கவிதா எங்கேயும் தப்பி ஓட முடியாது என சவால் விடுத்தார். கரூர் மேயர் கவிதா வெளியே இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துக் கொள்ளட்டும் என்றும் அதுவரை பாஜகவின் ப்ளக்ஸ் பேனர்களை கிழிப்பது, போஸ்டர்களை கிழிப்பது போன்ற பணிகளை பார்த்துக்கொள்ளட்டும் எனவும் உள்ளே சென்றுவிட்டால் இதை செய்ய முடியாது எனவும் கலாய்த்தார்.
ரொம்ப ஆடக்கூடாது என்றும் ஆடியவர்கள் எல்லாமே இன்று உள்ளே இருக்கிறார்கள் எனவும் கூறிய அண்ணாமலை, நடப்பதை எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். கரூரில் இல்லாத கெட்டப்பழக்கம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் கரூருக்கு வந்துவிட்டதாகவும் இதனை தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் சாடினார்.