இலங்கையில் நடந்து முடிந்த தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் வெற்றியின் முக்கியத்துவத்தையும் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கை பெற்றது தொடர்பில் எமது பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தெற்கு அரசியல் கட்சியாக இருக்கும் இந்த அரசாங்கம், வடக்கு மற்றும் கிழக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டு, புதிய அரசியல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதை இலங்கையின் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மக்களால் பரந்த எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார். அதேவேளை, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
பழைய அரசியல் முறைமைகளை மாற்றி, புதிய அரசியல் கலாசாரம் மற்றும் பயணத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் எதிர்கட்சிகள் சரியான வகையில் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதையும், புதிய அரசியல் கலாசாரம் அதன் சிறந்த மாற்றமாக இருக்க வேண்டியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம், தேசிய உறவுகள் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கம் தனது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற முக்கியமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.