மீகொடை, நாகஹவத்தை பகுதியில் கடந்த 14ஆம் திகதி நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 27 வயதுடையவர் எனவும் கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும் பொலிசார்
தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மறுநாள், கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மீகொடை பொடி தனா வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீகொட பொடி தனாவுக்கும் கொலை செய்யப்பட்ட நபருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பொடி தனாவுடன் இருந்த நட்பின் காரணமாக பணம் பெற்றுக்கொள்ளாமல் இந்த கொலையை செய்ததாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்கொண்டு வருகின்றனர்.