தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாதிய கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான இழிநிலையை நோக்கிச் செல்கிறது என தெரிவித்துள்ள அவர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது…
சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று என புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல, சீமான் சாதி ஒழிப்புக்காக எத்தனை போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்? சாதிய கொடுமைகளை கண்டித்து எத்தனை இடங்களில் நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி உள்ளது? சாதி ஆணவப்படுகொலைகளை ஞாயப்படுத்தி குடி பெருமை பேசுகிற சீமான் போன்றவர்களால் தான் சாதி கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை சார்ந்த நிர்வாகிகளின் பெயர்களுக்கு பின்னால் பரவலாக சாதி பெயர்களும் தொங்கிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது சாதியத்தை யார் வளர்க்கிறார்கள் என்பது தெரியும்?. இவ்வாறு வன்னி அரசு பதிலளித்துள்ளார்.