இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,525 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூரத்தை எதிர்த்து உலகமே குரல்கொடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை கொடுக்க துனிசியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபியர் முன்வந்திருக்கிறார்.
மகளிர் டென்னிஸ் சங்க டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வென்ற பின்னர் பேட்டியளித்த அவர் இதை கூறியுள்ளார்.
அதாவது, “வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நான் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலகின் தற்போதைய சூழல்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகளும், சிறுவர்களும் உயிரிழப்பதை பார்ப்பது கடினமாக இருக்கிறது.
இது என் இதயத்தை உடைத்துவிட்டது. நான் என்னுடைய பரிசு தொகையில் ஒரு பாதியை பாலஸ்தீனத்திற்கு வழங்க முடிவெடுத்துள்ளேன். இது அரசியல் செய்தியல்ல. இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். எனக்கு அதுதான் வேண்டும்” என்று கண்ணீர் விட்டவாறு கூறியுள்ளார்.