தமிழ்நாடு
சனாதன ஒழிப்பு பேச்சுக்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான ஆ.ராசா எம்.பி. தரப்பு இன்று வாதத்தை முன்வைக்க உள்ளது.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…
சமீபத்தில் 2 மாதங்களுக்கு முன்னர் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. நான் பேசியது இரண்டு நிமிடம் தான். ஆனால் அதைப் பெரிசாக்கிவிட்டு பொய்யாக்கி பூதாகரமாக்கி நான் பேசாததை எல்லாம் பேசியதாக சொல்லி என் மீது வழக்கு தொடர்ந்தார்கள். உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர் சேகர் பாபு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சொனார்கள். நீ என்னா பண்ணினாலும் நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நான் பேசுனது பேசுனதுதான். சட்டப்படி சந்திப்போம்; நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவே இல்லை. சமூக நீதி வேணும்; அனைவரும் சமம் என்பதைத்தான் வலியுறுத்தி பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பையன்; கலைஞருடைய பேரன்; பேசுனா பேசுனதுதான். கொள்கையைத்தான் பேசி இருக்கிறேன். பின்வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.