தமிழ்நாடு
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் நடைபயம் மேற்கொண்டார். இதற்கிடையே நேற்று பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது,
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள் யாத்திரை இப்போது 103 தொகுதியை நிறைவு செய்துள்ளது. அடுத்த கட்ட நடைப்பயணம் 15ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. இந்த பாத யாத்திரையில் எனக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மக்களிடையே பாத யாத்திரைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கட்சி சாராத பலரும் கூட இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் இருந்து கொண்டு ஆட்சி நன்றாக இருப்பதாக திமுகவினர் சொல்கிறார்கள். பல ஊர்களுக்குச் சென்றால் கள நிலவரம் அவர்களுக்குப் புரியும். மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. நடைபணத்தில் பலரும் ஆட்சி சரி இல்லை என்று தங்களிடம் முறையிடுகிறார்கள். குறிப்பாக விவசாயிகளைப் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், சில அரசியல் தலைவர்கள் கொக்கு மீன் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். நாங்கள் அரசியலில் கொக்கை போலப் பொறுமையாக இருப்போம். கொக்கு போலப் பொறுமையாக காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜகவுக்கு இருக்கிறது. அது 2026இல் உங்களுக்குத் தெரியும். மற்ற கட்சிகளுக்கு எங்கள் பலம் 2026இல் தெரியும். மக்கள் நல்லாசியுடன் 2026இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் தெரிவித்தார்.