தமிழ்நாடு
அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை எழுந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்புகள் வழங்கின.
தற்போது ஓபிஎஸ் தரப்பு அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். எம்ஜிஆர் மாளிகையை அதிமுகவினர் கோவிலாக கருதுகின்றனர். அங்கு குண்டர்களோடு புகுந்து அராஜகம் செய்தார் ஓபிஎஸ். தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் இறங்கினார். இப்போது ஹை கோர்ட் அதிமுக பெயரையோ, கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துக்கூடாது என தீர்ப்பு அளித்துள்ளது. இதை அதிமுகவினர் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
எதிரிகள், துரோகிகளுக்கு இந்த தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. இனி அவர் கரை வேட்டியை கட்ட முடியாது. வேறு கலரில் தான் வேட்டி கட்ட வேண்டும். கட்சியின் பெயரை பயன்படுத்தினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும் என்றார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “கரை வேட்டியை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் கூற முடியாது. அது அவரவர் தனிப்பட்ட உரிமை. இதை தவறா பரப்பிகிட்டு இருக்காங்க, சினிமாவில் வரும் ஹீரோ மாதிரி ஓபிஎஸ் அடி வாங்கிக் கொண்டே இருப்பார். கடைசியில் ஒரே ஒரு அடி; வில்லன் அவுட் ஆயிடுவான். அந்த கதை நடக்கும்” என்று கூறினார்.