ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது.
354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள். பொதுவாக இப்படி ஆட்களே இல்லாமல் காலியாக இயக்கப்படும் விமானங்களைப் பேய் விமானங்கள் அதாவது ghost fligts என்று அழைப்பார்கள். ஆனால், கத்தார் ஏர்வேஸ் விமானம் எதற்காக காலியாக விமானங்களை இயக்குகிறது? அதுவும் ஆஸ்திரேலியாவில் என்ற குழப்பம் வரலாம்.
இப்படி காலியாக இயக்குவதால் கத்தார் ஏர்வேஸுக்கு நஷ்டம் எல்லாம் இல்லை. சொல்லப்போனால் பல கோடி ரூபாய் லாபம் தான். சட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டையைப் பயன்படுத்தி காலியாக விமானத்தை இயக்கியும் பல கோடியை அள்ளுகிறார்கள்.
பொதுவாக இரண்டு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகே விமானச் சேவையை ஆரம்பிக்க முடியும். இரு நாடுகளும் தங்கள் நாட்டு நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே ஒப்பந்தங்களைப் போடும். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விமானச் சேவை தொடர்பாகப் போடப்படும் ஒப்பந்தத்தில் பல கட்டுப்பாடுகள் இருக்கும்.
அப்படித்தான் ஆஸ்திரேலியா மற்றும் கத்தார் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய நகரங்களுக்கு கத்தாரில் இருந்து வாரம் 28 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலியா விமானங்களையும் பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்பதாலேயே இந்த விதி.
பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய 4 முக்கிய நகரங்களுக்கு இந்த கட்டுப்பாடு உள்ளது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்த 4 முக்கிய நகரங்களில் மட்டுமே பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், அங்கே விமானங்களை இயக்கினால் அது நஷ்டத்திலேயே முடியும். அதேநேரம் இந்த லிஸ்டில் உள்ள 4 நகரங்களுக்குச் செல்லும் கத்தார் ஏர்வேஸின் 28 விமானங்களும் எப்போதும் ஹவுஸ்புல் ஆகிவிடும். எவ்வளவு தேவை இருந்தாலும் கூடுதல் விமானங்களை இயக்க முடியாது.
இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் இந்த யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த 28 விமான கட்டுப்பாடு என்பது 4 நகரங்களுக்கு மட்டுமே. மற்ற நகரங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் கத்தாரின் தோஹா ஏர்போர்ட்டில் இருந்து மெல்போர்ன் வழியாக அடிலெய்டு செல்கிறது. இதில் பயணிக்கும் 95% பயணிகள் மெல்போர்ன் செல்லும் பயணிகளாகவே இருப்பார்கள்.
இருப்பினும், இது இறுதியாகச் சென்று சேரும் இடம் அடிலெய்டு என்பதால் இது 28 விமான வரம்பிற்குள் வராது. மேலும், தோஹா டூ அடிலெய்டு யாரும் புக் செய்யாமல் இருக்க கத்தார் ரேட்டை அதிகரிப்பது தொடங்கிப் பல விஷயங்களைச் செய்வார்கள். இதன் காரணமாகவே தினசரி இந்த விமானம் காலியாக செல்கிறது. என்னதான் மெல்போர்ன் டூ அடிலெய்டு விமானத்தை காலியாக இயக்கினாலும் கூட, தோஹா டூ மெல்போர்னில் கத்தார் ஏர்வேஸ் மொத்தமாகப் பணத்தை அள்ளிவிடும்.
விதிகளை மீறாமலேயே கத்தார் ஏர்வேஸ் பணத்தை அள்ளிவிடுகிறது. இதன் காரணமாகவே கத்தார் ஏர்வேஸ் தினசரி ஆஸ்திரேலியாவில் பேய் விமானங்கள் அதாவது கோஸ்ட் விமானங்களை இயக்குகிறது. அதேநேரம் கத்தார் ஏர்வேஸின் இந்த விமானச் சேவை ஆஸ்திரேலியா விமானங்களின் வருவாயைப் பாதிப்பதாக அங்கே எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளது.
மேலும், கத்தார் ஏர்வேஸ் என்றில்லை உலகெங்கும் இருக்கும் பல ஏர்வேஸ் நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையான ஒன்றாகவே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.