இந்தியாவில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு , சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, பாதிக்கப்பட்டுள்ள இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபாங்க், கக்சிங், காங்போக்பி மற்றும் சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.