பாடசாலை சென்ற பிள்ளைகள் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கும்பல், பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற அவசர சத்திரசிகிச்சை செய்வதற்குத் தேவையான பணத்தை உடனடியாக வரவு வைக்குமாறு கேட்பதோடு வங்கிக் கணக்கு எண்ணையும் வழங்குவார்கள் என தெரியவந்துள்ளது.
சீதுவ உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் பலர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பல் இவ்வாறு தாய் மற்றும் தந்தை இருவரும் வேலை செய்பவர்களின் பிள்ளைகளை குறி வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு மோசடியான அழைப்புகளை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறு பெற்றோரை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்த கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.