நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இப்போது “கோட்டாபய – பகுதி 2” ஆக மாறிவிட்டாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்க கடும் கண்டனங்களை முன்வைத்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியில் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளபோது அவரால் தீர்வை வழங்க முடியாமலிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் மீது மாத்திரமின்றி மேலும் சில அமைச்சர்களது பட்டங்கள் தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று போலியான பட்டதாரிகள் தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர்.
மக்களின் பாரிய ஆணையைப் பெற்றுள்ள கட்சி என்ற ரீதியில் நாட்டுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.
அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியிருந்த போதிலும் இன்னும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.