இந்தியா, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
இதனடிப்படையில் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.
அதேபோல் நாட்டு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
பதவிப்பிரமாணம் செய்த பிரியங்கா காந்தி தனது நன்றி உரையின் போது, “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன். காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.