இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
இன்று விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் நாடு வகை அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதி செய்வதால் தேசிய விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்பட போவதில்லை. இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும். போலியான குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.